×

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயரில் அழைக்கப்படும் : பிரதமர் மோடி அறிவிப்பு!!

டெல்லி : ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படக்கூடிய உயரிய விருது கேல் ரத்னா விருது. இந்தியில் கேல் ரத்னா என்பது விளையாட்டு துறையில் ரத்தினக் கல்லை போன்றவர் என்று பொருள்படும். அந்த வகையில் விளையாட்டு துறைக்கான கேல் ரத்னா விருது இனிமேல் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயரில் அழைக்கப்படும்  என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் தயான்சந்த் பெயரை கேல் ரத்னா விருதுக்கு சூட்ட எனக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். அவர்களின் பரிந்துரைகளுக்கு நன்றி. அவர்களின் உணர்வுகளை மதித்திடும் வகையில் பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ராஜீவ் கேல் ரத்னா விருது இனி தயான்சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படும். ஜெய் ஹிந்து,என்றார்.

இந்தியாவின் தலைச் சிறந்த ஹாக்கி வீரரான தயான்சந்த் பங்கேற்ற அணி 1928,1932,1936 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றது. தயான்சந்த் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம் தேதி நமது நாட்டின் தேசிய விளையாட்டு தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. ஏற்கனவே தயான்சந்த் பெயரில் டெல்லியில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் முக்கிய பங்காற்றிய தயான்சந்த்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் கேல் ரத்னா விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விளையாட்டுத்துறைக்கான வழங்கப்படும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, ஹாக்கி ஜாம்பவான் தயான்சந்த் கேல் ரத்னா என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Tags : Major Dayanand ,Modi , பிரதமர் நரேந்திர மோடி
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...